பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளமான யூட்டியூபில் அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருபவர் யூட்டுயூபர் சவுக்கு சங்கர். இவர், அவ்வப்போது பல சர்ச்சையாக கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கி கொள்வது வழக்கம். சில நேரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சமீப காலமாக திமுகவிற்கு எதிரான தனது கண்டனங்கள் பதிவு செய்து விமர்சங்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை கோவை அழைத்து வந்தனர். சவுக்கு சங்கர் கைது தொடர்பாக கோயம்புத்தூர் நகர போலீசாரும் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் விவரங்களை பதிவிட்டுள்ளனர். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் இருந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தாராபுரம் வழியாக கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் வழியில், தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம் மோதியதில் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தாராபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சவுக்கு சங்கர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, சவுக்கு சங்கரின் ஊடகத்தை திமுக அரசு முடக்க நினைப்பதாக தனது கண்டனத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்து இருந்தார். அதில், “விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.
அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம். சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.”என்று தெரிவித்து இருந்தார்.