சென்னையில் நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, நண்பனை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில், சம்பந்தமில்லாத இரண்டு நண்பர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆவடி மசூதி தெருவை சேர்ந்தவர் அரசு என்ற அசாருதீன் (வயது 32). இவர் ஆவடி மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். ஆவடி வசந்தம் நகர் சிவகுரு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (29), ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களான ஆவடி பெரியார் நகர் 4-வது தெருவை சேர்ந்த ஜெகன் (30) மற்றும் சிலருடன் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் மது அருந்தினர்.

அப்போது மர்மகும்பல் அசாருதீன், சுந்தர் இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டன. இதில் ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர்.இந்த இரட்டை கொலை தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை தொடர்பாக ஆவடி கொள்ளுமேடு இரட்டை குட்டி தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32), அஜித்குமார் (20), வினோத் (19), தனுஷ் (20), பாமாலை (21), பிரகாஷ் (25), விஜய் (26), பாரதி (22), சதீஷ் (24) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் கைதான 9 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான மணிகண்டனும், தப்பி ஓடிய ஜெகனும் வெவ்வேறு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது நண்பர்களானார்கள். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்த ஜெகனுக்கு, அவருடைய மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு மணிகண்டனின் மனைவியுடன் ஜெகன் தனிக்குடித்தனம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக ஜெகன், மணிகண்டன் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஜெகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து, ரூ.10 ஆயிரம், 2 கிலோ கஞ்சா கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி சனிக்கிழமை அன்று மணிகண்டன், ஜெகனுக்கு போன் செய்து பணம் தருவதாக கூறி ஆவடி ஓ.சி.எப். மைதானத்துக்கு வரும்படி அழைத்தார். அதன்படி ஜெகன், தனது நண்பர்களான படுகொலைசெய்யப்பட்ட அசாருதீன், சுந்தர் மற்றும் யாஸீன் (24) ஆகியோருடன் அங்கு வந்தார்.

இதனை தூரத்தில் இருந்து கவனித்த மணிகண்டன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் ஜெகனை வெட்டிக்கொலை செய்ய முயன்றார். அப்போது ஜெகன் மற்றும் யாசின் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதால் அசாருதீன் மற்றும் சுந்தர் இருவரையும் வெட்டிக்கொலை செய்தனர்.

தாங்கள் குறி வைத்த ஜெகன் தப்பி ஓடிவிட்டதால், அவரது நண்பர்கள் 2 பேரையும் வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal