சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 10 பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு  கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்போது பெண்கள் சிலர் கூட்டமாக நின்றுகொண்டு துணி எடுப்பதுபோல நடித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கேமரா காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.

இதில் கூட்டமாக நின்ற பெண்களில் 7 பேர் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் யார் என்று விசாரணை நடத்தியதில் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து திருடிய சேலைகளை திருட்டு கும்பலின் ஒரு பிரிவினர் தபாலில் அனுப்பி வைத்தனர். இந்த கும்பல் தீபாவளி நேரத்தில் மீண்டும் கைவரிசை காட்ட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது



By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal