தேர்தல் வந்துவிட்டாலே எதிர்வேட்பாளரை காலி செய்ய பல்வேறு ஆயுதங்களை எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கும் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் – ஜேடிஎஸ். முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தின் கட்சி. தேவகவுடா மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் அரசியலில் உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் குமாரசாமி, ஹாசனில் சிட்டிங் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டனர். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது ஜேடிஎஸ். இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளை பெருமளவு காங்கிரஸுக்கு கொண்டு சேர்த்தார்ல் துணை முதல்வர் டிகே சிவகுமார். இதனால் ஜேடிஎஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவி இருப்புக்கே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை கர்நாடகாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஹாசன் தொகுதி வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வந்து விழுந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போனது. ஜேடிஎஸ் கட்சியின் தேர்தல் ஏஜெண்ட் பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் இது தொடர்பாக புகார் ஒன்றும் அளித்தார். அதில், நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச வீடியோக்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை- மார்பிங் செய்யப்பட்டவை. பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயரைக் கெடுக்கவே இத்தகைய போலி ஆபாச வீடியோக்களை பரப்பி விடுகின்றனர் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக எஸ்ஐடி விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. வட கர்நாடகாவின் 14 லோக்சபா தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. வட கர்நாடகா லோக்சபா தேர்தலில் மிக கடுமையான தாக்கத்தை இந்த ஆபாச வீடியோ விவகாரம் ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தேவகவுடா குடும்பம் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தருவதாகவும் கூறியுள்ளது. அதே நேரத்தில் ஆபாச வீடியோக்கள் வெளியான உடனே பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்குப் புறப்பட்டுப் போனதாகவும் கூறப்படுகிறது.