தென்காசி மாவட்டம் சிவகிரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த காரை சோதனை செய்தனர். சோதைனயில் 440 கிலோ குட்கா காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இதனையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் (52), லாசர் (58) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கைதான சுபாஷ் சந்திரபோஸ் திமுக ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகவும், அவருடைய மனைவி தமிழ்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இந்நிலையில், குட்கா வழக்கில் கைதான சுபாஷ் சந்திரபோஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ‘‘தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட தி.மு.க.வில் நடப்பது என்ன என்பது பற்றி உள்குத்து அரசியலில்¢ ஈடுபடாத நடுநிலையான உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தி.மு.க.விற்கும் போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பேசி வந்த நிலையில்தான், ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் குட்கா கடத்தல் வழக்கில் கட்சியை விட்டு நிரந்திரமாக நீக்கப்பட்டிருக்கிறார்.
இவரது மனைவி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருக்கிறார். சிவபத்மநாபனின் மாவட்டச் செயலாளர் பதவியை பறிப்பதற்கு இவர்தான் முக்கிய காரணமாக இருந்தவர். இன்றைக்கு இவருடைய கணவர் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தி.மு.க. தலைமைக்கு மிகுந்த கெட்டப் பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தலில் தொடங்கிய உள்குத்து அரசியல்தான் இன்றைக்கு பூதாகரமாகி தென்காசி மாவட்ட தி.மு.க.விற்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி, கட்சிக்கு மிகப் பெரிய அவப்பெயரை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இரு நபர்கள்தான். சுரண்டையை சொந்த ஊராக கொண்டு, அன்பகத்தை அடைமொழியாக வைத்துக்கொண்டிருப்பவரும் தென்காசி மாவட்ட தி.மு.க.வில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் குடும்பத்தில் உள்ள ஒருவரும் அரசியல் செய்வதால், தென்காசி உடன்பிறப்புக்கள் செய்வதறியாது தானாகவே உள்குத்து அரசியலில் ஈடுபடுகிறார்கள்.
இதே நிலை நீடித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி, ஆலங்குளம், வாசுதேவ நல்லூர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளும் பாதிக்கப்படும். எனவே, மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனேயே தென்காசி மாவட்ட தி.மு.க.வில் நடக்கும் உள்குத்து அரசியலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா..?