மாலத்தீவில் ஓய்வெடுக்க திட்டமிட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென கொடைக்கானல் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின்.

கடந்த 5 நாட்களாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து சற்று விடுபடுவதற்காகவும், பிஸியான செட்யூல்டிலிருந்து ஓய்வு எடுக்கவும் மாலத்தீவுக்கு குடும்பத்தினருடன் சென்று வர வேண்டுமென ஸ்டாலினிடம் உதயநிதி பேசியிருக்கிறார். குடும்பத்தினரும் அதனை விரும்பியுள்ளனர். இதனை அடுத்து திங்கள் கிழமை கிளம்பி மே மாதம் 5 – ந்தேதி சென்னை திரும்புவதற்கேற்ப ஸ்டாலின் குடும்பத்தினர் ப்ரோக்ராம் போட்டுள்ளனர். ஸ்டாலினும் இதற்கு சம்மதித்தாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், 1 வாரம் மாலத்தீவு செல்கிறார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஸ்டாலின் ஒப்புக்கொண்டாலும், அடுத்தடுத்த ஆலோசனையில் மாலத்தீவு ப்ரோக்ராம் வேண்டாம் என சொல்லி விட்டார். இதனையடுத்தே கொடைக்கானல் சென்று ஒரு வாரம் ஓய்வெடித்து வரலாம் என திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவு செல்லலாம் என தீர்மாணிக்கப்பட்ட திங்கள் கிழமை அன்று ( 29 ஆம் தேதி) கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார் ஸ்டாலின். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு செல்ல முடிவாகியுள்ளது. கொடைக்கானலில் ஏப்ரல் 29 முதல் மே 4-ந்தேதி வரை குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கிறார். இங்கிருந்தபடியே அரசு பணிகளையும் கவனிப்பார் என சொல்லப்படுகிறது. முதல்வரின் வருகையை ஒட்டி, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, மாவட்ட காவல் துறை எஸ்.பி. பிரதீப் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடைக்காலம் வந்துவிட்டாலே கொடநாட்டில் முதல்வரின் முகாம் அலுவலகத்தை மாற்றி விடுவார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டும் சில நாட்கள் மட்டுமே கொடைக்கானலில் தங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal