அதிரடி அரசியல் பலருக்கு கை கொடுக்காது… சிலருக்கு கைகொடுக்கும்… அந்த வகையில் ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

‘தங்கத்தாரகை… இரும்பு பெண்மணி’ என்றெல்லாம் வர்ணித்தார்கள். அ.தி.மு.க. எனும் கட்சியை தனது உள்ளங்கைக்குள் வைத்திருந்தார். தி.மு.க.வில் கூட இரண்டாம் கட்ட நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்குவது கடினம்! ஆனால், ஜெயலலிதா எப்பேர்பட்டவராக இருந்தாலும், கீழே ‘தூக்கி’ எறிவார். அடிமட்டத் தொண்டனை ஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்வார். அப்படிப்பட்ட அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர்தான் ஜெயலலிதா..!

அப்படிப்பட்ட ஜெயலலிதாவிடம் 30 வருடமாக, அவரது அதிரடி அரசியலுக்கு உறுதுணையாக இருந்த சசிகலா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். காரணம், இவர்களை எல்லாம் ‘தூக்கி சாப்பிடும்’ அளவிற்கு எடப்பாடியாரின் அரசியல் இருக்கிறது. ‘விபத்தில் முதல்வராக வந்துவிட்டார்’ என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் பேசினாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டு, இன்றைக்கு அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை, பல்வேறு இக்கட்டான சூழல்களுக்கு மத்தியிலும் ‘லாவகமாக’ வழிநடத்திச் செல்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எத்தனையோ அஸ்திரங்களை எடுத்துப் பார்த்தார் சசிகலா. ஆனால், எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது. இந்த பிறந்த நாளினை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விமர்சியாக கொண்டாடவிருக்கிறார்கள். அன்றைய தினமாவது ஏதாவது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சசிகலா அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, அவருடன் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா செல்லலாம் என்ற ஒரு தகவலும் வருகிறது. அங்கு வெளியில் இருக்கும் விநாயகரை வழிபட்டுவிட்டுச் செல்லாம் என்கிறார்கள். அதே சமயம், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லவும் திட்டமிட்டிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், ‘அக்கா’வின் (ஜெயலலிதா) பிறந்த நாளன்று சின்னம்மா (சசிகலா) புது அவதாரம் எடுப்பது நிச்சயம் என்கிறார்கள்.

வருகிற 24-ந்தேதி சசிகலாவின் ‘மாஸ்டர்’ பிளான் விஸ்வரூபம் எடுக்கிறதா அல்லது புஸ்வானமாகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal