மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றி வைத்தார்.

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சந்தித்துள்ளது. ஆனால் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதுதொடர்பாக எங்கள் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர். இனி வரும் காலங்களில் நீதிமன்றங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொதுநல வழக்குகள் போடப்படும். மக்கள் நீதி மய்யம் மனு என்றால் உடனடியாக நீதிபதிகள் விசாரணைக்கு எடுக்கும் அளவுக்கு நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

நாம் இனி கட்டப்போகும் கோட்டை வலுவான கருங்கல்லால் கட்டியதாக இருக்க வேண்டும். அந்த கோட்டை பலரும் இளைப்பாறும் இடமாகவும் அமைய வேண்டும். ரத்தம், -வியர்வையை சிந்தி நாம் வாங்கிய சுதந்திரத்தை 75 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுவிட்டோம். இனி அந்த சொத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவேண்டும். நான் தேர்தல் களத்துக்கு வந்த போது ஒரு கருத்தை தெரிவித்தேன். நாங்கள் வந்து விட்டோம் இனி ஓட்டுக்கான செலவு அதிகரிக்கும் என்று கூறினேன். அது தான் இந்த தேர்தலில் நடந்துள்ளது. ஓட்டுக்காக பணத்தை வாரி இறைத்துள்ளனர். ஆனால் நாங்கள் உயிரை கொடுத்து நாட்டை காக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

நாளை வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகளை தான் முதலில் எண்ணவேண்டும். நான் பார்த்த பாடத்தில் இருந்து இதனை கூறுகிறேன். நல்ல செய்தி தபாலில் வரும் என்றும், கெட்ட செய்தி தந்தி வழியாக வரும் என்றும் கூறுவார்கள். எனவே தபால் ஓட்டுக்களை முதலில் எண்ணிவிட வேண்டும். இல்லை என்றால் கடைசியில் வாக்குகள் குறையும் போது புதிதாக தபால் எழுதிவிடுவார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது நாளை நாம் விழிப்புடன் செயல்பட வேண்டு. நான் இன்று புகார் அளிப்பது போல தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தயங்கக் கூடாது’’ என்று பேசினார்.

மேலும் பேசிய கமல், ‘‘நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டின் விலையை ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். கவுன்சிலர் தேர்தலிலேயே இவ்வளவு விலை நிர்ணயித்து இருக்கிறார்கள். இவ்வளவு பணத்தை முதலீடு செய்பவர்கள் அதை திருப்பி எடுக்கத்தானே பார்ப்பார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரை நாம் எப்படி ஓட்டு போட்டாலும் அவர்கள் இதைத்தானோ செய்யப் போகிறார்கள் என்ற சோர்வு தான் வாக்குப்பதிவு குறைவதற்கு காரணம். இந்த முறை நோட்டாவும் கிடையாது, எனவே நோட்டாவிலும் ஓட்டுப்போட முடியாது. அதை எதற்காக நீக்கினார்களோ? அவர்களுக்கு எங்களை பார்த்தும் பயம், நோட்டாவை பார்த்தும் பயம். தேர்தலில் நேர்மைக்கு இடமே இல்லாமல் பணத்தை வைத்து விலை பேசினார்கள். இது தான் வெற்றி என்றால் அது திருடர்கள் கையிலேயே இருக்கட்டும்.

கவுன்சிலர் தேர்தலிலேயே இவ்வளவு விலை நிர்ணயித்தால் பாராளுமன்ற தேர்தலில் எவ்வளவு விலை நிர்ணயிப்பார்கள் என்று யூகித்து கொள்ளுங்கள். அது ஓட்டுக்கான விலை அல்ல. உங்கள் தலைக்கான விலை. நடந்து முடிந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் அராஜகம் தலைவிரித்து ஆடியிருக்கிறது. இதை இப்படியே விட்டால் பாசிசம் தலை தூக்கும்’’ என்றார்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் சென்னை கோட்டைக்கு சென்று தலைமைச் செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதுதொடர்பாக அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கிராமப் புறங்களில் வரவு, செலவு கணக்கை கண்டிப்பாக கவுன்சிலர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற சட்டம் கடந்த 2010-ம் ஆண்டு தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாமல் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதன்படி செயல்பட்டால் கிராமப் புறங்களில் ஊழலை ஒழிக்க முடியும் என்று கமல்ஹாசன் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal