நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் ‘எக்ஸிட் போல்’ ரிப்போர்ட்… என பத்திரிகைகள் கருத்துக்கணிப்புகளை வெளியிடும். அதில் வரும் முடிவுகள் ஓரளவிற்கு ஒத்துப்போகும். தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தல் முடிவுகள் பற்றி உளவுத்துறை மூலம் சில தகவல்கள் ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது.

முதல்வருக்கு கிடைத்த முக்கியத் தகவல்கள் குறித்து காக்கி வட்டாரத்திலும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் பேசினோம்.

‘‘உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ, எதுவாக இருந்தாலும் ஆளும் கட்சியே பிரதான வெற்றி பெறும் என்பது நடைமுறை. ஆனால், தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில், ‘தேர்தல் வாக்குறுதி… பொங்கல் பரிசுத் தொகுப்பு… நகைக்கடன் தள்ளுபடி’ போன்றவற்றை அ.தி.மு.க. கையில் எடுத்திருந்தது.

அ.தி.மு.க.வினருக்கு இது ஓரளவு தேர்தல் பிரச்சாரங்களில் கைகொடுக்கிறது என்று தேர்தலுக்கு முன்பே உளவுத்துறை மூலம், முதல்வருக்கு ரிப்போர்ட் போக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம், ‘தீவிரமாக தேர்தல் பணியாற்றும்படி’ முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அவரவர் தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தி.மு.க. வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பிறகு சில இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் படுதீவிரமாக வேலைபார்த்தாலும், பல இடங்களில் முழுமனதுடன் வேலை பார்க்க வில்லையாம். இதனால் தேர்தல் முடிவுகள் ‘எப்படி’ வேண்டுமானாலும் வரலாம். இதனை கண்கூடாக பார்க்க முடிந்தது. சிலர் உறவுகளுக்காக மட்டுமே தேர்தல் பணிகளை பார்த்தனர். கட்சி என்பதால் பலர் சரியாக வேலைபார்க்க வில்லை’’ என்றனர்.

தி.மு.க.நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் எதற்காக ‘ஏனோ… தானோ…’ என்று வேலை பார்க்க வேண்டும் என்று ‘அதிருப்தி’ உ.பி.க்களிடம் பேசினோம்.

‘‘சார், அ.தி.மு.க. ஆட்சி இருந்தபோது கூட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘வளமாக’ வலம் வந்தனர். ஆனால், பெயருக்குத்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் (அமைச்சர் அல்லாத) ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் சேர்மன்களுக்கு எந்தவித ‘வளர்ச்சியும்’ இல்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகாவது, எங்களை கொஞ்சம் ‘ஃபிரியா’ விட்டால்தான், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற முடியும் என்பதை தலைமைக்கு உணர்த்தும் விதமாகத்தான் ‘மந்தமாக’ செயல்பட்டோம்’’ என்று ஓபனாக பேசியது நம்மை அதிர்ச்சியடைய வைத்தது.

ஆளும் தரப்பு நிர்வாகிகளின் ‘மனக்குமுறல்’ பற்றி சில சீனியர் தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசியபோது,

‘‘முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் மிகவும் திறம்பட, மக்களின் மனவோட்டத்திற்கு ஏற்ப ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த காலங்களில் கட்சி நிர்வாகிகளை ‘ஃபிரியாக’ விட்டதால்தான், 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. கட்சி பாகுபாடின்றி தவறு செய்பவர்கள் மீது முதல்வர் கறாராக நடவடிக்கை எடுத்து வருவது, நடுத்தர மக்களை மகிழ்ச்சியடை வைத்திருக்கிறது.

தி.மு.க. ஆட்சியின் மீது எந்தவொரு அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட ஆங்காங்கே வன்முறைகள் வெடித்தது. ஆனால், நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் சொல்லிக்கொள்ளும் படியாக எங்கும் பெரிதாக வன்முறை வெடிக்க வில்லை. இது முதல்வரின் ஆட்சிக்கு கிடைத்த நல்ல பெயர். தி.மு.க.வில் இருந்துகொண்டு கட்சிப் பணியில் சுணக்கம் காட்டுபவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பார் முதல்வர்’’ என்றனர்.

தி.மு.க. அனைத்து மாநகராட்சிகளை கைப்பற்றினாலும், உள்ளாட்சித் தேர்தலில் ‘சுணக்கம்’ காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே தற்போதைய அறிவாலயத்தில் இருந்து வரும் தகவல்களாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal