தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவியது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை அங்கம் வகித்தன.

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து நன்றி கூறினார். செல்வப்பெருந்தகையுடன் காங்கிரஸ் வேட்பாளர்களும் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன், முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் சந்தித்தனர். இந்திய கம்யூ. மாநில செயலானர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்கனவே முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக எங்களது வெற்றி வேட்பாளர்கள் சந்தித்தனர். முதல்வருடன் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்தது பெருவாக்கு வாரியான வித்தியாசத்தில் வெற்றி கனியோடு முதல்வரை சந்திப்போம். டெல்லி உள்பட வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்காக முதலமைச்சர் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன், “இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி பிரதமரை தீர்மானிப்பது திமுகவாகதான் இருக்கும்,”என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal