விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் தாக்கல் செய்த மனுவில், மக்களவை தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர் மற்றும் மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் கூட வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனு மீதும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கண்ட இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மனு மீது முடிவெடுக்கப்படும்,” இவ்வாறு தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாரதிய ஜனதா கட்சி தலைவர் தொடுத்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal