விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

நம் நாட்டில் சட்டசபை, லோக்சபா தேர்தல் உள்பட பல தேர்தல்களில் இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

முன்பு இருந்தே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையி்ல தற்போது அந்த புகாரை மேடைக்கு மேடை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் எனும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் உள்ளிட்டவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஓட்டு எண்ணிக்கையின்போது விவிபேட் ஒப்புகை சீட்டை 100 சதவீதத்தை எண்ண கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபன்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில், ‛‛தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டளித்ததை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் விவிபேட் இயந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கையின்போது 2 சதவீத விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டு கூட எண்ணப்படுவது இல்லை. அதிலும் பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100 சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும்” என்ற வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் விவிபேட் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்றால் எத்தனை நாட்கள் வரை தேவைப்படும் என கேட்டார். அதற்கு தேர்தல் ஆணையம், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. நாட்டில் 97 கோடி பேருக்கு ஓட்டு உள்ளது. இதனால் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க வேண்டும் என்றால் 12 நாட்கள் வரை ஆகலாம்” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மனுதாரர் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பிலான வாதங்கள் கடந்த 18ம் தேதி நிறைவடைந்தன. மேலும் நீதிபதிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. அதற்கு கடந்த 24ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிிய மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal