புதுடில்லி:‘எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம், பரந்த அளவில் மருந்துப் பொருட்களை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், உலகளவில் 70 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. புனேவை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனம், அதன் துணை நிறுவனமான, ‘ஜென்னோவா பயோ பார்மசூட்டிக்கல்ஸ்’ வாயிலாக, கொரோனாவுக்கான ஆர்.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.

இந்த பங்கு வெளியீட்டின்போது, 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்கள் வசம் இருக்கும் 1.81 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும் பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

By admin