ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினி தனது 170-வது படத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது:- ஜெயிலர் படம் நான் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக நான் நடிக்கும் 170-வது படம் நல்ல கருத்துள்ள பிரமாண்ட பொழுது போக்குள்ள படமாக இருக்கும். இந்த படத்திற்கு தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அடுத்து நான் நடிக்கும் 171-வது படமும் ஜனரஞ்சக படமாக இருக்கும் என்றார். இதைத்தொடர்ந்து ரஜினியிடம் நிருபர்கள் கர்நாடகத்தில் காவிரி பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு ரஜினி சிரித்தபடி பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.