நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்து பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது, காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சிறிய மிருகங்கள் சீண்டிக் கொண்டே இருக்கும். காக்கா, கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். கழுகு எப்போதும் அமைதியாக இருக்கும். கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும். ஆனால் அதன் இறக்கையை கூட காக்கா வால் தொட முடியாது. உலகின் உன்னதமான மொழி மவுனம். (இது நடிகர் விஜய்யை ரஜினி மறைமுகமாக தாக்கிய கருத்தாக கூறப்படுகிறது.)
நம்ம வேலையை பார்த்துக்கிட்டு நாம் போய்க்கிட்டே இருக்கணும். குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம். நீங்க குடிப்பதினால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் தயவு செய்து குடிக்காதீர்கள்.
படத்தில் உள்ள ஹூக்கும் பாடலில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் என்பதை மட்டும் எடுக்கச் சொன்னேன். அது எப்போதுமே தொல்லை தான். 1977-லிலேயே இந்த பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு படத்தின் டைட்டில் சூப்பர் ஸ்டார் என்று போட்டார்கள். அதை நான் வேண்டாம் என்று சொன்னேன். காரணம் அப்போது கமலும், சிவாஜியும் பெரிய ஹீரோ. அதனால் வேண்டாம் என்று சொன்னேன். உடனே என்னை பயந்துட்டேன் என்று சொன்னார்கள். நாம பயப்படுகிற இரண்டு பேர் ஒன்று கடவுள் இன்னொன்று நல்லவர்கள். இவ்வாறு ரஜினி பேசினார். விழாவில் ரஜினியின் பேரன்கள் யாத்ராவும் லிங்காவும் கலந்து கொண்டனர். ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணனும் விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.