ஒரு தலைக் காதலால் பியூட்டி பார்லர் நடத்தி வந்த இளம் பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம்தான் சித்தூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நாகராஜ்… இவருக்கு 2 மகள்கள்… மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது..
இளைய மகள் துர்காவுக்கு 21 வயதாகிறது.. சித்தூர் மாவட்டம் கொண்டமிட்டா பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றை சொந்தமாகவே நடத்தி வருபவர்.இந்நிலையில், நேற்று மாலை பியூட்டி பார்லர் கடையில் இருந்து, ரத்தம் வெளியே வழிந்தோடிவருவதை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்து போயுள்ளார்கள்.. அதனால், பதறியபடியே, பியூட்டி பார்லர் கதவினை திறந்து பார்த்தனர்.
அப்போது துர்கா ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.. அவருக்கு பக்கத்திலேயே ஒரு இளைஞர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. அவரது கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தது.. இதை பார்த்து பொதுமக்கள், அலறியடித்து கொண்டு வெளியே வந்து, தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்… போலீசாரும் விரைந்து சென்று உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு, துர்காவின் சடலத்தையும் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் தெலங்கானா மாநிலம், பத்ராச்சலம் கொத்தகூடத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பதும், வயது 28 என்பதும் தெரியவந்தது.. துபாயில் சில வருடங்கள் சமையலராக வேலை பார்த்து வந்தாராம்.. ஊருக்கு திரும்பியதுமே, சித்தூரில் உள்ள துர்கா சந்திப்பு என்ற இடத்தின் அருகே பிரட் ஆம்லெட் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்த கடையை திறந்து 15 நாட்கள்தான் ஆகிறதாம்.. சக்கரவர்த்தி குடும்பத்தினருக்கும், நாகராஜ் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது.. அதனால், சக்கரவர்த்தி அடிக்கடி நாகராஜ் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போதுதான் துர்காவை அங்கு சந்தித்துள்ளார். கலகலவென பேசுவாராம் சக்கரவர்த்தி.. அதனால், துர்காவும் இவரிடம் நட்பு ரீதியாக பழகிவந்துள்ளார்.. ஆனால், சக்கரவர்த்தியோ, துர்காவை காதலிக்க துவங்கிவிட்டார்.. ஒருகட்டத்தில் தன்னுடைய துர்காவிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
ஆனால், ஆனால் துர்கா அந்த காதலை ஏற்கவில்லையாம். இருந்தாலும், காதல் டார்ச்சரை தொடர்ந்து துர்காவிற்கு தந்துவந்துள்ளதாக தெரிகிறது.. நேற்றைய தினம், சக்கரவர்த்தி நேராகவே, துர்காவின் பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கிருந்த துர்காவிடம், தனது காதலை ஏற்கும்படி மறுபடியும் வற்புறுத்தியுள்ளார்… அத்துமீறி பார்லருக்குள் வந்ததுடன், மிரட்டலும் விடுத்து டார்ச்சரும் செய்ததால், துர்கா ஆவேசமானார்.
அதனால், சக்ரவர்த்தியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், துர்காவின் கழுத்தை அறுத்துள்ளார்.. துர்கா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழவும், அதே கத்தியால் தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. சக்கரவர்த்திக்கு சிகிச்சை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அங்கு அடங்கவில்லை.