கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த ஆண்கள் அடுத்தடுத்து ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்வம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தான் மகன் சுபாஷ் காதல் செய்து வந்தார். ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரை அவர் காதலித்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காதலை கைவிடும்படி கூறி வந்துள்ளார். ஆனால் சுபாஷ் காதலை கைவிடவில்லை. இதற்கிடையே தான் எதிர்ப்பையும் மீறி சமீபத்தில் சுபாஷ், அனுஷாவை திருமணம் செய்தார்.
இதையடுத்து சுபாஷ் தனது மனைவி அனுஷாவுடன் திருப்பூரில் தனியாக வசிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் நேற்று சுபாஷ் தனது மனைவியுடன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் அருணபதிக்கு வந்தார். அங்கு அவர் தனது பாட்டி கண்ணம்மா (தண்டபாணியின் தாய்)வீட்டுக்கு சென்றார். இந்த வேளையில் அங்கு சென்ற தண்டபாணி அரிவாளை எடுத்து மகன் சுபாஷ், அவரது மனைவி அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் துடித்த நிலையில் தண்டபாணி அங்கிருந்து ஓடினார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது சுபாஷ், கண்ணம்மா ஆகியோர் இறந்தது தெரியவந்தது. அனுஷாவுக்கு மட்டும் தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். ஆணவக்கொலை செய்யப்பட்ட சுபாஷ், பாட்டி கண்ணம்மாவின் உடல் ஊத்தங்கரை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தண்டபாணியை போலீசார் தேடிவருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், சரண்யா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இதையடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு ஜெகனை, சரண்யாவின் குடும்பத்தினர் ஆணவக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னொரு ஆவணக்கொலையாக 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.