சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக, சென்னை இமேஜ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.கிருஷ்ணா, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு சமூக சேவைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வருகிறார் ஜி.ஆர்.கிருஷ்ணா. இவர் சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இந்திய அரசின் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் தேசிய ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் (தொழில்துறை பிரதிநிதி), தேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் மதிப்புறு உறுப்பினராகவும் உள்ளார்.
தற்போது இவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலைய ஆலோசனைக்குழுவின் தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி., பல்வேறு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அரசு அலுவலர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழு விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்திட தேவையான ஆலோசனைகளை வழங்கி உதவும் பணியை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.