வருகிறது 26-ந்தேதி ஓ.பி.எஸ்.ஸுக்கு அ.தி.மு.க.வினர் மகுடம் சூடத் தயராகி வரும் நிலையில், சசிகலாவிடம் சரண்டராக ஓ.பி.எஸ். தயாராகிவருகிறார்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 9 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்டவிதியாகும். இதை தொடர்ந்து பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த வாரம் (26-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாளை (19-ந்தேதி) மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரிகள் இருவரும் அவரது வேட்பு மனுவை பெற்றுக்கொண்டனர்.
இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள் (20-ந்தேதி) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 21-ந்தேதி கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. சட்டவிதியை குறிப்பிட்டு அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. சட்ட விதி 20அ பிரிவு 1(ஏ) (பி) (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ். அணியினர் அ.தி.மு.க. சட்டவிதிகளை சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பாய்ச்சலை தொடங்கியுள்ளார்.
இதன்மூலம் அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாக வருகிற 26-ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரே வழி நீதிமன்றம்தான்… ஆனால், நீதிமன்றத்தில் வென்று எடப்பாடி பழனிசாமி வருகிற 26&ந்தேதி பொதுச் செயலாளர் ஆகிவிட்டால், சசிகலாவிடம் சரண்டர் ஆகிவிடுவார் ஓ.பன்னீர் செல்வம் என்கிறார்கள். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமியைப் போல், துணிந்து அரசியல் செய்யும் வல்லமை ஓ.பி.எஸ்.ஸுக்கு கிடையா-து. ஓ.பி.எஸ்.ஸைப் பொறுத்தவரை பின்னால் இருந்து யாராது ஒருவர் இயக்கியாக வேண்டும் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்!