தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பங்கேற்றதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், வைரமுத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை தொடர்ந்து இசைஞானி இளையராஜா ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை வாய்ஸ் மெசேஜ் மூலம் ட்வீட் செய்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். திமுகவின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். 

இந்நிலையில்  அவருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதோடு அவர் நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து வாழ்த்துப் பெற்ற அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

திரை பிரபலங்கள் பலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா இன்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார். 

நீங்கள் இந்த பதவியேற்கும் நாளில் உங்களை வாழ்த்துவது மகிழ்ச்சியை தருகிறது. வள்ளுவனின் வாக்கைபோல உங்களின் தாய் உங்களை நினைத்து எவ்வளவு பெருமை படுவார் என்பதை நான் நினைத்து பார்த்து மகிழ்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் அரசியலில் களத்தில் இறங்கி விட்டீர்கள். இருப்பினும் அமைச்சர் எனும் ஒரு பதவி மூலம் உங்கள் பொறுப்பு அதிகரிக்கிறது. உங்களின் பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் புகழையும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நிச்சயம் நீங்கள் அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்” எனும் ஒரு வாய்ஸ் மெசேஜை ட்வீட் செய்துள்ளார்  இளையராஜா. 

By Divya