கள்ளக்காதல்கள் கொலையில்தான் முடியும் அல்லது வேறுவிதமான ஆபத்துகளில் முடியும் என்று தெரிந்தே, அதிகரிப்பதுதான் வேதனை அளிக்கிறது!
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பனை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ளது புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம். இங்கு குருசம்பேட்டா பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லாட்டி ராம்பாபு (35), சங்காடி புஜ்ஜி (35).நண்பர்களான இருவரும் ஒன்றாக மீன்களை மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் புஜ்ஜி அடிக்கடி ராம்பாபு வீட்டிற்கு வந்து செல்லும் போது ராம்பாபு மனைவி அர்தானியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராம்பாபுவிற்கு தெரியவந்ததை அடுத்து கடந்த 11 ஆம் தேதி மனைவியுடன் புஜ்ஜி தகாத உறவில் இருந்த போது அங்கு வந்த ராம்பாபு கத்தியால் புஜ்ஜியின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏனாம் போலீசார் புஜ்ஜியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஏனாம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த ராம்பாபுவை ஹைதராபாத் புறவழிச்சாலையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியுடன் கள்ள தொடர்பில் இருந்த நண்பனை கணவன் கொன்ற சம்பவம் ஏனாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.