ஜெயலலிதா முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகாலம் பணியாற்றியவர் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கு.ப.கி.யின் மௌனம் பற்றி அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திளாக விளங்குபவர்கள் முத்தரையர்கள்தான். அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு முத்தரையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அதன் பிறகு ஜெயலலிதாவும் முத்தரையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர் என பதவி வகித்து வந்தனர். திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் சிலையை நிறுவியது கு.ப.கிருஷ்ணன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான். தற்போதைய அ.தி.மு.க.வில் கொங்கு கவுண்டர்கள், வன்னியர்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முத்தரையர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஏன் சசிகலா கூட முத்தரையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே, அண்ணன் கு.ப.கி. முத்தரையர் நலன் கருத்தி எந்த முடிவெடுத்தாலும், நாங்கள் அவர் பின்னால் அணிவகுக்கத் தயார்’’ என்றனர்.

சமீபத்தில்கூட மதுரையில் முத்தரையர் சிலைய அமைச்சர் மூர்த்தி தலைமையில், உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal