அகமதாபாத் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய பிரதமர் மோடி, வாக்காளர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தனது அடுத்த பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 93 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் 1,300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நட்சத்திர வேட்பாளர்கள் என்று பார்த்தால் அமித் ஷா (காந்தி நகர்), ஜோதிராதித்ய சிந்தியா (குனா), மன்சுக் மாண்டவியா (போர்பந்தர்), பர்ஷோத்தம் ரூபாலா (ராஜ்கோட்), பிரகலாத் ஜோஷி (தர்வாத்) உள்ளிட்டோரை சொல்லலாம்.

இன்றைய தேர்தலில் 17.24 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதையொட்டி 1.85 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 18.5 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி தனது வாக்கை செலுத்த பிரதமர் மோடி இன்று காலை வருகை புரிந்தார்.

அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகப்படியான வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வேண்டும். வாக்கு சதவீதத்தை அதிகரித்து காட்ட வேண்டும். இன்னும் 4 கட்டத் தேர்தல் எஞ்சியிருக்கிறது. குஜராத் மாநில வாக்காளரான நான், ஒவ்வொரு முறையும் இந்த வாக்குச்சாவடிக்கு வந்து தான் வாக்கை செலுத்தி வருகிறேன். எஞ்யிருக்கும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பிற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.

நேற்று ஆந்திராவில் வாக்கு சேகரித்தேன். தற்போது குஜராத் மாநிலத்தில் இருக்கிறேன். அடுத்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்க உள்ளேன். எனவே என்னால் அதிகம் பேச முடியாது. குஜராத் மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் தங்கள் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றி வரும் இந்த நாட்டு மக்களுக்கு நன்றி. உலகின் 64 நாடுகளில் நடப்பாண்டு தேர்தல் நடக்கிறது.


எனவே ஒரு நாட்டை மற்றொரு நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் நிலை ஏற்படும். சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்தியா திகழ்கிறது. நம்முடைய தேர்தலை ஜனநாயக திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகளும், தேர்தல் மேலாண்மையும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக காணப்படுகிறது. எனவே நம்முடைய தேர்தல் முறை குறித்து சர்வதேச பல்கலைக்கழகங்கள் கள ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal