மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தச் சொன்ன ஊழியர்களை காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. இதனிடையே மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி செல்லக் கூடிய பதிவு எண் இல்லாத கார்களும்,  வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கார்களும், திருமங்கலம் நகர் பகுதி வாகனங்கள் எனக் கூறி ஏமாற்றி, சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இது போன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்த கேட்டுக்கொண்ட போது, அவ்வபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சுங்கச்சாவடி ஊழியர்களை, வாகன ஓட்டிகள் தாக்குவதும், அவர்களை கார் ஏற்றி கொல்ல முயற்சிப்பதும் ஆகிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சுங்கச் சாவடி ஊழியர்கள்  தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி,  காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிகளை ஈடுபட்டு வருகின்ற நிலை ஏற்பட்டு வருவதாகவும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காத போதிலும் பதிவு எண் இல்லாத கார்களும் உள்ளூர் வாகனம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்களை கொலை முயற்சி செய்யும் நோக்கத்தோடு தாக்குவதும், ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal