அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 23-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் ஆதரவு மா.செ.க்கள் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல், நெல்லை மாவட்ட செயலாளர் கணேச ராஜாவும் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இதனிடையே, தனது ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வீட்டு வாசலில் குவிந்திருந்த தொண்டர்களை சந்தித்து பேசினார்.

ஓ.பி.எஸ்.ஸுக்கு நெடுங்காலமாக இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாஃபா, ‘‘வருகிற 23&ந்தேதிக்கு அ.தி.மு.க.வில் அதிசயம் நிகழும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையே தமிழகம் முழுவதிலும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், சில மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.

‘‘சார், அ.தி.மு.க.வில் உள்ள இரட்டைத் தலைமையால் தொண்டர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை குழப்பமடைந்துள்ளனர். இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. இனியும் இதே நிலை நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அதலபாதாளத்திற்கு சென்றுவிடும் அதற்குள் நாங்கள் ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுத்தாகவேண்டும். திட்டமிட்ட படி வருகிற 23&ந்தேதி எடப்பாடியார் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஆகிறார்.

மூத்த நிர்வாகிகள் தலைமையில் ஒரு சில குழுக்கள் அமைத்து, அ.தி.மு.க. என்ற மாபெறும் இயக்கத்தை வழிநடத்த எடப்பாடியார் முடிவு செய்திருக்கிறார். இது எல்லாம் பொதுக்குழுவில் தெரியவரும். அதே சமயம், நாளைக்குள் அண்ணன் ஓ.பி.எஸ். மனம் மாறிவந்தால், அவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தான் வகித்துவரும் பொருளாளர் பதவியோடு, அவைத் தலைவர் பதவியும் வழங்க எடப்பாடியார் முடிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜா, தேனியில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்று, ‘நான் அன்றைக்கே சொன்னாம் சின்னம்மா (சசிகலா) பக்கம் வாருங்கள் என்று! ஆனால், அவர் அப்போது கேட்கவில்லை… இப்போது அவரது நிலைமையை என்னால் பார்க்கமுடியவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.

எனவே, நாளைக்குள் அவைத் தலைவர் பதவியா… அல்லது சசிகலா ஆதரவா… என்று ஓ.பி.எஸ். முடிவு செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்’’ என்றனர்.

அரசியலில் ‘அதிசயம்’ நிகழ்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal