‘அ.தி.மு.க.வை தங்களது சுயநலத்திற்காக கூறுபோட்டுக் கொள்கிறார்கள்… பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்’ என்று சசிகலா தரப்பு சாட்டி வந்த குற்றத்தை, இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேரடியாகவே காண முடிந்தது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசும்போது, ‘அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை பற்றி பேசக்கூடாது’ என்று நிர்வாகிகளிடம் பேசி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த தகவல் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு உடனடியாக எட்டியது. உடனடியாக தொண்டர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.

இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மகளிர் அணி நிர்வாகிகள், ‘அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உருவாக வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓடிவந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் சமாதானம் அடையாமல் நுழைவு வாயிலில் நின்றபடி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

இதுதொடர்பாக மகளிர் அணி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தக்கூடிய ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூவாத்தூரில் காலில் விழுந்து முதல்- அமைச்சர் ஆனார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் ஜெயலலிதா நேரடியாக முதல்-அமைச்சர் பதவியை வழங்கினார்.

எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தான்’’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது பற்றி மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘சார், அ.தி.மு.க. மீண்டும் எஃகு கோட்டையாக மாறவேண்டும் என்றால், டி.டி.வி. தினகரன் அல்லது சசிகலா தலைமையில் இயங்கினால்தான் சாத்தியமாகும். ஏனென்றால், தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை யாராவது ஒருவருக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். தற்போது, ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். இருவருக்கும் யாரும் கட்டுப்படுவதில்.

காரணம், அவர்கள் இருவருமே கட்சியினால் வரக்கூடிய லாபத்தை பங்குபோட்டுக்கொள்கிறார்கள். இதே நிலை நீடித்தால், அண்ணா தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம், கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடும். தமிழகத்தில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும்’’ என்றனர் வருத்தத்துடன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal