வேலைக்கு அழைத்துச்செல்வதாக கூறி குவைத் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு அடிமையாக விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு துபையில் வாழ்ந்து வரும் எம்.கே. கஸ்ஸாலி, கேரளாவில் இருந்து பெண்களை அங்கு பணிக்கு அழைத்துச்செல்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மூன்று பெண்களை வேலைக்கு அழைத்துச்சென்று குவைத் நாட்டில் பணக்கார குடும்பங்களுக்கு அடிமையாக ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, மூன்று பெண்களின் ஒரு பெண்ணின் கணவர், குவைத்தில் இருக்கும் மலையாளிகளின் நல அமைப்புக்கு தனது மனைவி படும் இன்னல்கள் குறித்து வீடியோ மற்றும் ஆடியோவை அனுப்பி, வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறிய புகாரில், வேலைக்கு ஆள்கள் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்துபோனோம். விசா மற்றும் விமான டிக்கெட்டுக்குக் கூட பணம் வேண்டாம் என்று கூறினார்கள். மாதம் 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னதால் தனது மனைவி குவைத்துக்கு வேலைக்குச் சென்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கேரளத்திலிருந்து பெண்களை சுற்றுலா விசா மூலம் ஷார்ஜா கொண்டு சென்று அங்கிருந்து குவைத்துக்கு சாலை வழியாக அழைத்துச் செல்கிறார்கள். குவைத்திலிருக்கும் மிகப்பணக்கார குடும்பங்களுக்கு ஒவ்வொரு பெண்களையும் தலா ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிடுகிறார்கள்.

புகாரை தொடர்ந்து இந்த விவகாரத்தில் குவைத் நாட்டில் இருக்கும் மலையாளிகளின் நல அமைப்பு தலையிட்டு வீட்டு வேலை செய்ய தலா ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 பெண்களும் மீட்கப்பட்டு கேரள மாநிலத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

அப்பெண்கள் கூறுகையில், ‘‘தாங்கள் எங்கு அழைத்துச்செல்லப்படுகிறோம், தங்களை விற்பனை செய்வது கூட தெரியாது. ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு பல நாள்களுக்குப் பிறகுதான், அப்பெண்கள், தாங்கள் இந்த குடும்பங்களுக்கு விற்கப்பட்டுவிட்டோம் என்பதே தெரியவருவதாக’’ வேதனையுடன் கூறுகின்றனர். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ‘‘செல்போன்களை பயன்படுத்த வீட்டின் உரிமையாளர்கள் அனுமதி அளிக்கின்றனர். இதனால் நாங்கள் தப்பிக்க பேருதவியாக இருந்தது’’ என்றும் பெண்கள் கூறுகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal