குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18&ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற எம்பி-க்களும், சட்டப்பேரவை எம்எல்ஏ-க்களும் சேர்ந்து வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வார்கள். அதேநேரம் மாநிலத்தின் மக்கள் தொலை மற்றும் தொகுதிகளின் அடிப்படையில் எம்எல்ஏ-க்களின் மதிப்பு மாறுபடும்.

இதனிடையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் மீண்டும் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் 75 வயதை கடந்தவர்களுக்கு பாஜகவில் வாய்ப்பு வழங்கப்படுவது மிகவும் கடினம். இதனால் ஜூலை மாதம் 76 வயதை எட்டும் ராம்நாத் கோவிந்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது பேசுபொருளாகியுள்ளது.

இதனால் குடியரசுத் துணைத்தலைவராக இருக்கும் வெங்கய்யா நாயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிடோரின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் முன் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் பாஜக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையிலான எம்.பி-க்கள் இருக்கிறார்கள். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 49% வாக்குகளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23% வாக்குகளும் உள்ளன.

இந்தநிலையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜுன் 15ஆம் தேதி தொடங்கப்படும். ஜூன் 29ஆம் தேதியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடையும். வேட்புமனுக்கள் ஜூன் 30ஆம் தேதி சரிபார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2ஆம் தேதி கடைசி நாள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல் புதிதாக வெற்றிபெறும் குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்பார் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பாஜக தரப்பில் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏற்கனவே சந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில் , எதிர்க்கட்சிகள் எண்ண திட்டத்தோடு வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal