வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான்  அறிவித்துள்ள போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். 

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபையில் உள்ள  பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

சுமார் 99.90 கோடி ரூபாய் அரசு செலவில், 500 பேர் அமரும் வகையிலான தியான மண்டபம், தர்மசாலா புதுப்பிப்பு, டிஜிட்டல் நூலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

ஆனால், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு கிராம மக்கள், சன்மார்க்க சங்கத்தினர், பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

இந்தநிலையில் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில்  நாளை 4-ம் தேதி  வடலூரில் மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவித்திருந்தார்.  வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் அறிவித்த இந்த  போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் கட்சிகள்  சார்பில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் தடையை மீறி  நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிவித்தபடி நாளை  போராட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal