வைத்தீஸ்வரன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தேவாரம் பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செல்வ முத்துக்குமார சுவாமியும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இத்தலத்தில் சுவாமி அம்பாளை தரிசித்து கோயிலில் வழங்கப்படும் திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு இன்று காலை தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவரை கோயில் சார்பில் தருமபுரம் ஆதீன கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சுவாமி, அம்பாள், செவ்வாய் மற்றும் செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் மூன்று தம்பதியினருக்கு திருமணம் செய்து வைத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோயில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சீர்காழி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ. பாரதி மகன் கார்த்திக் திருமணத்தை நடத்தி வைத்தார்.

முன்னாள் அமைச்சர் ஒ.எஸ். மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal