தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக வள்ளல் தன்மை கொண்ட நடிகராக விளங்கியவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு மனிதராகவும் அரசியலில் ஒரு நல்ல தலைவராகவும் புகழ்பெற்று வந்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி முழு ஆதிக்கம் பெற்ற ஒரு மனிதராகவே இருந்து வந்தார். தன்னைவிட தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதுமே நலமாக இருக்க வேண்டும் என்பதை தன் மனதில் கொண்டவர். பசி என வருவோருக்கு வயிறார சாப்பாடு போட்டு அழகு பார்ப்பவர்.

இந்த நிலையில் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச. 28-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தொடர்ந்து
அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக இது போற்றப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal