போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம் ரொக்கம், 2 கார்கள், கணினி மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய, மாநில அரசுத்துறைகளில் வேலைவாங்கி தருவதாக கூறி போலி அரசு முத்திரை, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்த நன்மங்கலத்தைச் சேர்ந்த ரேணுகா, அவரது கணவர் ரஞ்சித் உள்பட 11 பேரை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பெயரில் போலியாக நேர்முகத்தேர்வு நடத்தி அரசு பணிகளை வாங்கிதருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் சமூக வலைத்தளம் மூலம் விபசார தொழில் நடத்திவந்த ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல விபசார தரகர் ஜோதிரஞ்சன் ஜெனா (30), அவரது கூட்டாளி கிருஷ்ணா சந்திரா ஸ்வைன் (27) ஆகியோரை விபசார தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். பள்ளிக்கரணை கரிமத்தில் விஜயா மனோகர் என்பவரின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தவர்களுக்கு சிறை தண்டனையை மத்திய நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் பெற்றுத்தந்துள்ளனர். இந்த வழக்குகளில் திறம்பட்ட செயல்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பணம், நகை, ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் பேட்டியளித்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:- அரசு வேலைவாய்ப்பு மோசடி வழக்குகளில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரே மாதத்தில் 18, 20 கொலைகள் நடந்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. மே மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன. இதில் 3 கொலைகள்தான் முன்பகை காரணமாக நடந்துள்ளன. சென்னையில் கொலை குற்றங்களை குறைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை போலீசை பொறுத்தவரையில் எந்தவித அரசியல் அழுத்தங்கள் இல்லாமலும் சுதந்திரமாக பணியாற்றுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பி.சி.தேன்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

By admin