தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய்க்கு இலங்கை பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் சு.பிரதீப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி வெளிவந்திருந்தது. நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தது. தவிர, நளை முதல்வராக பதவியேற்கவும் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார் விஜய்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நேற்று 5ம் தேதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கை மக்கள் சார்பாக விசேடமாக இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனது வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார்.
‘‘தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற செய்துள்ள ஜோசப் விஜய் அவர்கள். தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நலனுக்காக அவர் முன்னெடுக்கும் சகல முயற்சிகளும் வெற்றிபெற வேண்டும்’’ எனவும் பிரதி அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை அமைச்சரின் ஊடகப் பிரிவு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு கொழும்பு/ இலங்கையிலிருந்து வெளியிட்டிருக்கிறது.
