திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பனை த.வெ.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் கே.பி.எம்.ராஜா முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இந்த தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பத்தூர் தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன், பாஜக சார்பில் திருமாறன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழ் கட்சி சார்பில் ரம்யா மோகன், சசிகலா கட்சி சார்பில் உமாதேவி, முத்தரையர் அரசியல் களத்தின் தலைவர் பேரரசர் அஞ்சலை வெளியீட்டுக்குழு தலைவர் கே.பி.எம்.ராஜா சுயேட்சையாக போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் 4ம் தேததி எண்ணப்பட்ட நிலையில், தவெக – திமுக இடையே நீண்ட இழுபறி நிலவி வந்தது. இறுதியில், சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், அமைச்சர் பெரிய கருப்பனைவிட ஒரு வாக்கு மட்டுமே அதிகம் பெற்றார். பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்ற நிலையில், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மூன்றாவதாக வந்த திருமாறன் 29,054 வாக்குகளையும், ரம்யா மோகன் 15,291 வாக்குகளையும், முத்தரையர் அரசியல் களத்தின் தலைவர் பேரரசர் அஞ்சலை வெளியீட்டுக்குழு தலைவர் கே.பி.எம்.ராஜா 753 வாக்குகளையும், உமாதேவி 611 வாக்குகளையும் பெற்றனர்.

கடந்த 2006 முதல் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுகவின் வலுவான தொகுதியான இங்கு, இம்முறை தவெக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் கே.பி.எம்.ராஜா பிரித்த வாக்குகளும் காரணமாக அமைந்துவிட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே (எம்.ஜி.ஆர்., ஜெ., கலைஞருக்குப் பிறகு) முத்தயரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போதும் சரி, முதல்வர் அரசியல் மாநாட்டிலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் படத்தைப் போட்டிருந்தார். முத்தரையர்களுக்கு முக்கியத்துவத்தையும் கொடுக்க ஆரம்பித்தார் விஜய்.

இந்த நிலையில்தான், திருப்பத்தூரில் முத்தயரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் கே.பி.எம்.ராஜா பிரித்த 753 வாக்குகள், த.வெ.க. வேட்பாளரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்துவிட்டது.

கத்தி முனையை விட பேனா முனைக்கு வலிமை அதிகம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கே.பி.எம்.ராஜா..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal