திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ். இது தலைமுறைகளை கடந்த நட்பு. முன்பு கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கமும் நட்புடன் பழகி வந்தனர். அந்த நட்பு அவர்கள் மகன்களான ஸ்டாலின் – அன்பில் பொய்யாமொழியிடமும் தொடர்ந்தது. தற்போது தலைமுறைகளை தாண்டி இளைய தலைமுறையான உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ்பொய்யாமொழி வரை தொடர்கிறது. மகேஷ் தந்தை அன்பில் பொய்யாமொழி, துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே இறந்து போக, அவரது மகனான அன்பில் மகேஷ், ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே வளர்ந்து வந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தால், அமைச்சர் பதவி நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. எதிர்பார்த்தபடியே திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பில் மகேஷை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் முதல்வர் ஸ்டாலின்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது துறையில் காட்டும் அக்கறையையும், சுறுசுறுப்பான பணியையும் பார்த்து, ‘இவரது தந்தை இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாரோ… அந்த மகிழ்ச்சியை நான் அடைகிறேன்’ என்று அடிக்கடி கூறிவந்தார் முதல்வர் ஸ்டாலின். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடனேயே, ‘உதயநிதி ஸ்டாலினும் அமைச்சராக வேண்டும்’ என்று முதன் முதலில் அச்சாராம் போட்டவரே அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான்! இன்றைக்கு அதை சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றியிருப்பதுதான் உடன் பிறப்புக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சென்னையில் கடந்த 28-ந்தேதி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில வருகிற ஜூன் 3-ந்தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சிக்கு விமானத்தில் ஸ்டாலின் வந்திறங்கிய சமயத்தில் இப்படியொரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal