வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக ஈரோடு, கரூர், வேலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் அக்னிநட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை இது நீடிக்கிறது. கத்திரி தொடங்கிய முதல் நாளில் தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகப்பட்சமாக கரூரில் 110.3 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்தப்படியாக ஈரோட்டில் 110.12 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. சென்னையில் 104.18 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்றும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் போலவே நேற்றும் 104.18 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால், சென்னையில் வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருந்ததால் காலை 10 மணிக்கு மேல் சென்னைவாசிகள் அத்தியாவசிய தேவையை தவிர மற்றப்படி வெளியே செல்வதை தவிர்த்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும் அவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். அதே நேரத்தில் வீட்டில் உள்ள மின் விசிறிகள் வெப்ப காற்றை அள்ளி வீசியது. வீடுகளில் ஏசி இருந்தால் மட்டுமே குளிர்ச்சியை அனுபவிக்க முடிந்தது. மதிய நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் மக்கள் நடமாட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், பிற்பகல் வேளையில் சென்னையில் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் மிக மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
வெயிலின் கொடுமையால் ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மாலை 4 மணிக்கு மேல் இயற்கை காற்றை சுவாசிக்க சென்னை மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள பூங்காக்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால், மாலை 4 மணி முதல் கடற்கரை பகுதிகள், பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
மாலை 6 மணிக்கு மேல் மக்கள் வெள்ளமாக கடற்கரை, பூங்காக்கள் காட்சியளித்தன. வீட்டில் இருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை குடும்பத்துடன் சாப்பிட்டு இரவு வரை பொழுதை போக்கினர். இதனால் இரவு 9 மணி வரை கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனையும் களைகட்டியது.