கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலாத் தலங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலர் ஏற்காடு வரத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தில் இருந்த சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் வருவதால், அங்கு கூட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து, இ- பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் தடையின்றி வந்து செல்லக் கூடிய சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. ஞாயிறு விடுமுறை நாளான நேற்றும் ஏற்காட்டில் குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது.
அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக கூடியிருந்தனர். ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதில் சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் என்ற நிலையில், நேற்று அதிக எண்ணிக்கையில் படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், படகுத்துறை வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனிடையே, காட்சி முனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்திருந்து, ஏற்காடு மலையின் அழகையும், பள்ளத்தாக்கின் பரவசமூட்டும் கழுகுப் பார்வை காட்சியையும் கண்டு ரசித்தனர்.
சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வந்திருந்ததால், ஏற்காடு சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. சாலைகளில் போலீஸார் ஆங்காங்கே நின்றிருந்து, சுற்றுலாப் பயணிகளையும், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி வந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், ஏற்காட்டில் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இது சுற்றுலா பயணிகள் கூறும்போதும், ‘‘வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடந்த சில வாரங்களாக, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே, ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் ஒட்டுமொத்த பார்வை ஏற்காடு நோக்கி திரும்பியுள்ளது. எனவே, கடந்த சில நாட்களாக ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கேற்ப, கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதும், குளிர்ச்சியான சூழல் நிலவுவதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனால், பழங்கள் மற்றும் சாக்லேட் விற்பனை அதிகரிப்பு, உணவகம், விடுதிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள், சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்பனை என சுற்றுலாத் தொழில் களைகட்டுவதால், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்’’ என்றனர்.