கோவை மாநகராட்சி மாமன்ற வளாகத்தில், மேற்கு மண்டல தலைவர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. அதுவும், அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, கொண்டாட்டம் நடத்திய நிகழ்வு, அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம், விக்டோரியா ஹாலில் நடந்தது. தி.மு.க., – காங்., – மா.கம்யூ., – இ.கம்யூ., – ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தீர்மானங்கள் தொடர்பாக விவாதித்து, நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடியும்போது, ‘மேற்கு மண்டல தலைவர் தெய்வயானைக்கு இன்று பிறந்த நாள்’ என, மன்றத்தில் கவுன்சிலர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டார். உடனே, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கூட்டம் முடிந்ததும், மன்ற கூடத்துக்கு கேக் வரவழைக்கப்பட்டது. மேயர் கல்பனா, கமிஷனர் (பொ) ஷர்மிளா, உதவி கமிஷனர் (நிர்வாகம்) சரவணன் ஆகியோரது முன்னிலையில் கேக் வெட்டிய தெய்வயானை, மேயருக்கு ஊட்டினார்.
இது, சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.இது தொடர்பாக, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரான, எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ராணி விக்டோரியா நினைவாக, கோவை மாநகராட்சி மாமன்றம், 1892ல் கட்டப்பட்டது. பராம்பரியமிக்க இக்கட்டட வளாகத்தில், மாநகராட்சி கூட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கிய பிரமுகர்களான ரத்தினசபாபதி முதலியார், பொன்னுசாமி செட்டியார், நஞ்சப்ப செட்டியார், சுக்கூர் போன்றவர்கள், கோவை மக்களுக்காக பல திட்டங்களை தீட்டிய மாமன்றம் இது.

அங்கு, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை பிறந்த நாளை, தி.மு.க., மேயர் தலைமையில், துணை கமிஷனர், உதவி கமிஷனர் போன்றோர் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர். இது, மக்களின் கோரிக்கையை பற்றி பேசும் மாமன்றமா அல்லது கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் ஆடம்பர மண்டபமா? அன்றைய கூட்டத்தில், சொத்து வரியை உயர்த்தி விட்டு, மக்களின் கஷ்டங்களை மறந்து, பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தியதை, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்’’ என்று கொந்தளித்திருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal