தெலங்கானா மாநிலம், ஜஹீராபாத்தில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி,“ 2004 – 2009 -ம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அது முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது. தெலங்கானாவில் 26 சாதிகள் நீண்ட காலமாக ஓ.பி.சி அந்தஸ்து கோரி வரும் நிலையில், காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. ஆனால் முஸ்லிம்களை ஓ.பி.சி என்று ஒரே இரவில் வகைப்படுத்திவிட்டது. நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியின மற்றும் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவிடமாட்டேன்.

அம்பேத்கர் அளித்த அரசியல் சாசனத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற ஓவியங்களை நீக்கிய முதல் நாளிலிருந்தே அரசியல் சாசனத்தை அவமதிக்க ஆரம்பித்தது, காங்கிரஸ். முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசியலமைப்பை திருத்தி அதை அவமதித்தார். இரண்டாவதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பை நசுக்கி, நாட்டில் அவசரநிலையை விதித்து, லட்சக்கணக்கான மக்களை சிறையில் அடைத்து அவமதித்தார். மூன்றாவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நாட்டின் ஊடங்கங்களை பயமுறுத்தும் விதமாக ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்.

இவர்களின் வாரிசுகள், அரசியலமைப்பைப் பாதுகாப்பது பற்றி எப்படி பேச முடியும்… வாக்கு வங்கியை வலுப்படுத்த மதத்தின் அடிப்படையில் நேர்மையற்ற முறையில் பின்கதவு வழியாக இட ஒதுக்கீட்டை வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அதிகாரம் அவர்களுடன் இருக்கும்போது எல்லாமே நல்லது. ஆனால், அவர்கள் அதிகாரத்தை இழக்கும்போது அனைத்துக்கும் மதிப்பில்லாமல் நடந்துகொள்வார்கள். மூன்றாவது முறையாக பதவியேற்று அரசியலமைப்பின் 75-ம் ஆண்டு மிகப் பெரியளவில் கொண்டாடப்படும்.

காங்கிரஸின் பாவங்களை நாட்டின் ஒவ்வொரு தெருவுக்கும் எடுத்துச் செல்வேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 55 சதவிகித பரம்பரை வரி விதிக்கப்படும். காங்கிரஸ் அரசுக்கு ஐந்து அரசியல் அடையாளங்கள் உள்ளன. ஒன்று பொய்யான வாக்குறுதிகள், இரண்டாவது வாக்கு வங்கி அரசியல், மூன்றாவது மாஃபியா மற்றும் குற்றவாளிகளை ஆதரிப்பது, நான்காவது குடும்ப அரசியல், ஐந்தாவது ஊழல். தெலங்கானாவை பி.ஆர்.எஸ் முதலில் சூறையாடியது. இப்போது காங்கிரஸ் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியா கூட்டணி மிகவும் அவநம்பிக்கையாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. அது அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக மாறும் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது, பி.ஆர்.எஸ் அரசின் காளேஸ்வரம் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, இப்போது ஊழல் கோப்புகளில் அமர்ந்திருக்கிறது” எனச் சாடியிருக்கிறார்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விவகாரம் தேர்தல் தொடங்கியதிலிருந்து விவாத களத்துக்கு வந்திருக்கிறது. பிரிக்கப்படாத ஆந்திராவில் 1960-களில் இருந்து பிரிக்கப்படாத ஆந்திராவில் முஸ்லிம்கள் மத்தியில் சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. 1994-ல், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கே.விஜயபாஸ்கர் ரெட்டி, சலவைத் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் போன்ற சில வகை முஸ்லிம்களை OBC பட்டியலில் சேர்த்து ஒரு ஜி.ஓ வெளியிட்டார். ஆனால் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை.

ஜூலை 2004-ல், காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தனது தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை நிறைவேற்றி, குறிப்பிட்ட பிரிவு முஸ்லிம்களுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தார். தற்போதுள்ள நான்கு பிரிவுகளுக்கு மேல் (ஏ முதல் டி வரை) புதிய பிரிவை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்கள் ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். ஒ.பி.சி பிரிவுகள் ஏ – டி வரை 25 சதவிகிதம், எஸ்.சி-க்கள் 15 சதவிகிதம், எஸ்.டி-கள் 6 சதவிகிதம், முஸ்லிம்களின் சில குறிப்பிட்ட பிரிவினருக்கான 5 சதவிகிதம் என மாநிலத்தில் மொத்த ஒதுக்கீடு 51 சதவிகிதமாக உயர்ந்தது.

இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பு 50 சதவிகிதத்துக்கும் எதிரானது என்று கூறி ஆந்திர உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது. 2007-ல், பி.சி முஸ்லிம்களை விட சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய, சலவைத் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் போன்ற 14 முஸ்லிம் குழுக்களின் நிலை குறித்த நீதிபதி சுப்ரமணியத்தின் அறிக்கையின் அடிப்படையில், ஒய்.எஸ்.ஆர் அரசு 14 வகை ஏழை முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வெளியிட்டது. அதன் மூலம் 50 சதவிகித வரம்பிற்குள் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal