சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். இருவரையும் சந்தித்து ‘ஈகோ’வை விட்டுவிட்டு ஒற்றுமையாக பணியாற்றுங்கள், அப்போதுதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘நம்’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரையும் பிரதமர் மோடி சந்தித்தபோது, சசிகலா பற்றியும் பேசியிருக்கிறார். அப்பாது ஓ.பி.எஸ். இசைவு தெரிவித்ததாகவும், இ.பி.எஸ். மௌனம் காத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் பிரிந்து கிடப்பவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியிருக்கிறாராம்.

இது பற்றி சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம், ‘‘சார், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அவர் அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவேன் என்றும், அ.தி.மு.க.க்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.

அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சிலர் மட்டுமே தன்னை எதிர்க்கிறார்கள் என்றும் சசிகலா கூறி இருந்தார். இப்படி அ.தி.மு.க.வை மீட்டு, மீண்டும் அக்கட்சியை எஃகு கோட்டையாக்க பல்வேறு வகைகளில் காய்களை நகர்த்தி வருகிறார். இது தொடர்பாக கடந்த வாரம் சசிகலா அளித்த பேட்டியில், ‘‘அ.தி.மு.க.வுக்கு தான் நிச்சயம் தலைமை தாங்குவேன். அதற்கான நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது’’ என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சசிகலாவை பா.ஜனதா முன்னாள் எம்.பி.யான விஜயசாந்தி சமீபத்தில் சந்தித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நேரத்தில் தி.நகரில் உள்ள இல்லத்தில் வெளிப்படையாக சந்தித்த விஜயசாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சசிகலாவின் வருங்கால அரசியல் பயணம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி கட்டுப்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது’’ என்றனர்.

ஆக, மொத்தத்தில்¢ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த அ.தி.மு.க. உருமாறி வலுவுடன் எதிர்க்கட்சிகளை எதிர்க்கும் என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal