நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1-ந் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரத்த தான முகாம் நடத்தியும் அஜித்தின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடினர். அஜித்தின் பிறந்தநாளன்று அவர் நடித்த கிளாசிக் ஹிட் படங்களான பில்லா மற்றும் தீனா ஆகியவை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இதனால் திரையரங்குகளும் திருவிழாக்கோலம் பூண்டது.

ஏற்கனவே விஜய் நடித்த கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட நிலையில், அதற்கு போட்டியாக தீனா படம் வெளியானது. இதனால் ஆர்வமிகுதியில் அஜித் ரசிகர்கள் சில அடாவடி சம்பவங்களில் ஈடுபட்டனர். அதில் ஒன்று தான் விஜய்யின் பேனர் கிழிப்பு சம்பவம். சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நடிகர் விஜய்யின் கில்லி பட போஸ்டர் வைக்கப்பட்டு இருந்தது. தீனா படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் அந்த பேனரை கிழித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது.

இதையடுத்து விஜய் பேனரை கிழித்த அந்த இளைஞர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தியேட்டர் நிர்வாகம், அந்த கிழிக்கப்பட்ட பேனரை அகற்றி புது பேனரை அங்கு வைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீஸாரிடம் செம்ம டோஸ் வாங்கிய அந்த இளைஞர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ஆர்வத்தில் விஜய் பேனரை கிழித்துவிட்டதாகவும், இந்த வீடியோ வாயிலாக அண்ணன் விஜய்யிடமும், தமிழக வெற்றிக் கழகத்தின் நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறிய அவர், மேலும் இதுபோன்ற சம்பவங்களில் இனி ஈடுபட மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி இருக்கிறார். விஜய் பேனரை கிழித்ததற்காக அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal