கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மாநிலங்களில் கேரளாவும் இடம் பெற்றிருக்கிறது.
இதனால் மக்கள் வெயில் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக உயிர்பலி ஏற்படுவதும் அரங்கேறி வருகிறது. தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து பலியாகினர். அதனைத்தொடர்ந்து பொது இடங்களுக்கு வந்த 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர்.
கடும் வெயில் காரணமாகவே அவர்கள் பலியாகியிருப்பது தெரியவந்தது. இதனால் பகல் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் 2 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் என 3 பேர் இறந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் பலியாகி இருக்கின்றனர். சுருண்டு விழுந்து இறந்த 2 வாலிபர்கள் உள்ளிட்ட 3 பேரும் கடும் வெயில் காரணமாகவே இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர்களது இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர். இருந்தபோதிலும் கேரளாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.