குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளைவிட 1.2 சதவீத வாக்குகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்பட நான்கைந்து பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் தனித்து வெல்வதற்கு வாக்குகள் குறைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 0.5 சதவீத வாக்குகள் குறைவாக இருந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் 1.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட உத்தரப்பிரதேசம், உத்தராகண்டில் எதிர்க்கட்சிகள் அதிகமாக வென்றதால் நிலைமை இன்னும் சற்று மாறிவிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் தொகை அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்படும். அதன்படி உத்தரப்பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆகும். நாட்டிலேயே இதுதான் அதிகபட்சம். உத்தராகண்டில் 64 ஆகும்.

உத்தரப்பிரதேசத்தில் முன்பு பாஜகவுக்கு 300-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் உத்தராகண்டில் 57 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். ஆனால், தற்போது உ.பி.யில் 255, உத்தராகண்டில் 47 எம்.எல்.ஏ.க்களாக குறைந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் முன்பைவிட அதிக இடங்களில் வென்றுள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்பால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 1.2 சதவீத வாக்குகள் குறைந்துவிட்டன. இன்றைய சூழலில் பாஜகவுக்கு எதிராக நாட்டில் சுயேட்சைகள் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டால், குடியரசுத் தலைவர் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஜூ ஜனதாதளத்துக்கு 21 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் வாக்கு மதிப்பு 14,828 ஆகும். இதேபோல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் வாக்கு மதிப்பு 19,824 ஆகும். இந்தக் கட்சிகள் உள்பட மற்ற சிறு மாநில கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்றாலே. குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சுலபமாக மெஜாரிட்டியை பெற்றுவிடுவார். ஜூன் மாதம் தொடங்கிய பிறகு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் வேகம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal