பா.ஜ.க,வின் இரு எம்எல்ஏ.,க்கள் திமுக.,வுடன் தொடர்பில் உள்ளதாகவும், கட்சி தலைமை தெரிவித்தால் இரண்டு பேரை தூக்கிவிடுவோம் எனவும் திமுக எம்.பி., செந்தில்குமார் தெரிவித்த கருத்தால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

திமுக ராஜ்யசபா குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுக.,விலிருந்து விலகி நேற்று (மே 08) தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக சூர்யா கூறுகையில், ‘‘மாற்றுக் கட்சியில் இணைய தனது தந்தை மறுத்த நிலையில் அதனை மீறி பா.ஜ.,வில் இணைந்தேன். சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.,வில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விரும்புகிறேன்’’ என்றார். திமுக., எம்.பி.,யின் மகன் பா.ஜ.,வில் இணைந்ததை பா.ஜ.,வினர் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக தர்மபுரி லோக்சபா தொகுதி திமுக எம்.பி.,யான செந்தில்குமார் தெரிவிக்கையில், ‘‘திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பா.ஜ.க,வுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த பா.ஜ.க, எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘‘முடிந்தால் தூக்குங்கள், பார்க்கிறோம்…’’ எனக் கூறினார். இருவரின் கருத்துகளும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal