தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் கொடுக்கும்படி ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை பிற்பகல் 3.30 மணி அளவில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
விஜய்யை வரவேற்ற ஆளுநர் அர்லேகர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
பதவியேற்பு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை காலை 11.30 மணி அளவில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல்வராக விஜய் நாளை பதவியேற்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ‘ஆட்சியமைப்பதற்கான முழு ஆதரவு பட்டியலை கொடுத்தால்தான் அழைப்பு விடுக்கப்படும்’ என ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருக்கிறது. தவிர, சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் (தலா 2 எம்.எல்.ஏ.க்கள்) ஆதரவை விஜய் கோரி இருந்தார். இவர்கள் நாளை தங்களது முடிவுகளை தெரிவிப்பதாக கூறியிருந்தனர். இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் த.வெ.க.வுக்கு 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. எனவே, 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தது.
த.வெ.க. தரப்பில் பதவியேற்ற பிறகு தங்களது முழு ஆதரவு (118 எம்.எல்.ஏ.க்கள்)பட்டியலை பின்னர் தருகிறோம் என்று கூறியிருந்தனர். ஆனாலும், கவர்னர் மாளிகை 118 பேர் கொண்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுங்கள். சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தேவையில்லை என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
