தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, தி.மு.க.வின் அதிகாரப்பூர்நாளேடான முரசொலி எந்தளவிற்கு அன்று கடுமையாக விமர்சித்திருந்ததோ, இன்றைக்கு அதைவிட அதிகளவில் நன்றி தெரிவித்து தலையங்கம் வெளியாகியிருக்கிறது!

நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆளும் தரப்பின் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் சட்டசபை கூட்டத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆளுநரின் செயலர் முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உடனே அந்த தகவலை அவையில் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் தற்போது ஆளுநர் ரவிக்கு முரசொலி நன்றி தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஆளுநர் ரவிக்கு எதிராக முரசொலி 3க்கும் மேற்பட்ட தலையங்கங்களை வெளியிட்டு இருக்கிறது. “கொங்கென்று நினைத்தாயோ கொங்கனவா” என்பதில் தொடங்கி பல தலையங்கங்களை ஆளுநருக்கு எதிராக முரசொலி எழுதி வந்துள்ளது. ஆளுநரின் அதிகாரங்களை கேள்வி எழுப்பி, ‘இது நாகலாந்து அல்ல தமிழ்நாடு’ என்று கடுமையான விமர்சனங்களை முரசொலி வைத்தது.

தற்போது அதே முரசொலி, ஆளுநர் ரவி நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளது. ஆளுநருக்கு நன்றி என்று முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், பேரவையில் கேள்வி நேரம் முடிந்து முதலமைச்சர் எழுந்து பேசத் தொடங்குகிறார்கள் என்றால், சபையே உற்றுக் கவனிக்கும். மிகமிக முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் முதலமைச்சர் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் தொற்றிக் கொள்ளும்.

நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் திடீரென எழுந்த முதலமைச்சர் அவர்கள், நீட் தொடர்பாக பேசத் தொடங்கினார்கள். என்ன அறிவிப்பாக இருக்கும் என்றுதான் அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ‘‘ஆளுநர் அவர்களின் செயலாளர் சில மணித்துளிகளுக்கு முன்னால் என்னைத் தொடர்புகொண்டார். இந்த பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ‘நீட் விலக்கு மசோதாவை’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஒன்றிய உள் துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த தகவலை ஆளுநரின் செயலாளர் எனக்குத் தெரிவித்துள்ளார்’’ – என்று முதலமைச்சர் சொன்னதும் சபையே அதிர மேசைகளை தட்டி உறுப்பினர்கள் வரவேற்றார்கள்.

‘இந்தத் தகவலுக்காகத் தானே காத்திருந்தோம்’ என்பதைப் போல உறுப்பினர்களின் முகங்கள் மலர்ந்தன. “நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த சட்டமுன் வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமைகிறேன்” என்று தனது அடுத்த இலக்கையும் அதே அவையில் முன்மொழிந்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்கள். இந்த அடிப்படையில் மிகமிக முக்கியமான நாளாக நேற்றைய தினம் அமைந்துவிட்டது. 228 நாட்கள் நடத்திய போராட்டம் நேற்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கிறது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..!’

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal