‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு; இனியும் பொறுத்திருக்க முடியாது’ என சசிகலா முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயரதிகாரிகளில் பேசியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, எத்தனையோ முயற்சிகளை கையிலெடுத்தும் கைகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், அடுத்து எடுக்கப்போகும் முடிவு எடப்பாடி பழனிசாமியை நிலைகுலைய வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம். இதற்காக அவர் சில ஓய்வு பெற்ற உயர்அதிகாரிகள், அ.தி.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறாராம்.

சசிகலா அப்படி என்ன ஆலோசனை நடத்தியிருக்கிறார்…. எத்தனையோ இடர்பாடுகளை லாவகமாக எதிர்கொண்ட எடப்பாடியாரை எப்படி நிலைகுலைய வைக்கப் போகிறார் என்பது பற்றி சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்…

‘‘ சார்… அவ்வப்போது ஓ-.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் மோதிக்கொள்கிறார்கள். அதன்பிறகு எப்படியோ சமாதானமாகி கட்சி மீட்டிங்குகளில் கலந்துகொள்கிறார்கள். இதனால், அடிமட்டத் தொண்டர்கள்தான் குழப்பத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தல் முடிந்து விட்டது. இந்த நிலையில்தான், அடுத்த கட்ட நகர்வுகளை எடப்பாடியார் எடுப்பதற்கு முன்பு, சசிகலா சில அதிரடிகளை நடத்திக்காட்டத் தயாராகி வருகிறாராம்.

சசிகலாவின் சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் தொடர்புகொண்டு அரசியல் எதிர்காலம் குறித்து விவாதிக்கத் துவங்கியிருக்கிறார். ஓய்வு பெற்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சசிகலாவின் சிபாரிசில் முக்கியத் துறைகளில் கோலோச்சியவர்கள். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஜெயிலில் சசிகலா விடுதலையான பிறகு அவருக்கும் சம்பளம் வாங்காத ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். அவர்களிடம் எதிர்கால அரசியல் குறித்து சசிகலா தொடர்ந்து விவாதித்துள்ளார். அப்போதுதான் தனிக்கட்சி என்ற தன்னுடைய ஐடியாவை அவர்களிடம் சொல்லி உள்ளார் சசிகலா. அதற்கு ஆலோசனையாளர்கள் வேண்டாம் என்று அவரை தடுத்துள்ளனர்.

அதாவது, ‘தனிக்கட்சி என்பது போகாத ஊருக்கு வழி சொல்வது. ஏற்கனவே தினகரன் கட்சி ஆரம்பித்து என்ன நிலை என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் தனிக்கட்சி துவக்குவது இன்றைய சூழல்களுக்கு சரிபட்டு வராது. அதிமுகவின் தலைமைக்கு நீங்கள் வரவேண்டும். அதற்கு என்ன வழிகள்? என்ன யுக்திகள்? என்பதை ஆராய்வதுதான் ஆரோக்கியமானது. அதிமுகவில் உங்களுக்கு தடையாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தான். அவரது டெல்லி பாசத்தை உடைத்து டெல்லியின் ஆதரவை முழுமையாகப் பெற முயற்சியுங்கள். அதுதான், வெற்றியை தரும் என்றார்கள்.

இதற்கு பிறகு சசிகலா மனமாற்றம் அடைந்தார். மேலும், அதிமுகவின் 30 எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. கட்சி தலைமைக்கு எதிராக மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்தால் கட்சி தாவல் தடைச் சட்டம் பாயாது என்பது விதிமுறை. இப்போதைக்கு சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதில் 22 எம்எல்ஏக்கள் ஒரு குழுவாக சசிகலாவை ஆதரித்தால் கட்சித் தாவல் தடைச்சட்டம் அவர்கள் மீது பாயாது. அதனால் 30 எம்எல்ஏக்களை குறி வைத்து சசிகலா தரப்பு காய் நகர்த்தி வருகிறது.

ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக செயல்பட்டால்தான், அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியும் அல்லது தி.மு.க.விற்கு கடும் நெருக்கடியை கொடுக்க முடியும். இந்த விவகாரத்தை ‘மதில்மேல் பூனையாக’ மனதை வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் சசி தூது விட்டிருக்கிறாராம். அதோடு, அவர்களுக்கு ‘வேண்டியதை’ செய்யவும் தயாராகி வருகிறாராம். இதனால், அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றனர்!

சசிகலாவின் முயற்சிக்கு பி.ஜே-.பி. ஆதரவு கிடைக்குமா என்று விசாரித்தபோது, ‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒன்றிணைந்து போட்டியிட்டால்தான், கூட்டணியில் இருக்கும் பி.ஜே.பி.யும் சில இடங்களில் வெல்ல முடியும். எனவே, அ.ம.மு.க.வை கலைக்கவும், சகிலாவையும் அ.தி.மு.க.வில் இணைத்தால் என்ன? என யோசிக்கிறது’’ என்றனர்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal