தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் துக்கிச் செல்வது குறித்து, விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்!

தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டத்தின் தருமபுரம் ஆதீனம். இந்த மடம் 16ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. இம்மடத்தில் ஆண்டு தோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள், பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் உள்ளார்.

2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம். இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கிறார்.

தே நேரம் பட்டின பிரவேச தடைக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ஆன்மீகவாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தடை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. எதிர்கட்சியினர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரவே விவாதம் நடைபெற்றது. முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம் பட்டினப்பிரவேசம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘‘மே 22ஆம் தேதிதான் பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நல்ல முடிவாக மகிழ்ச்சியான முடிவை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் ’’என்று கூறினார்.

ஆதீனம் சார்பிலே இந்து சமய அறநிலையத்துறையிடம் தொடர்ந்து தொடர்பில் வைத்திருக்கிறார்கள். நல்ல ஒரு சுமூகமான ரம்மியமான மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மூலவராகவும் உற்சவராகவும் இருக்கக் கூடிய முதல்வர் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் கூறினார். விளம்பரத்திற்காக நாங்கள் எதையும் சொல்வதில்லை. சொல்வதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என்ற அரசு நடைபெறுகிறது.

தலைப்புச்செய்திக்காக எதையும் சொல்வதில்லை. அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. ஆத்திகர் நாத்திகர் என அனைவரின் மனங்களும் குளிரும் வகையில் நல்ல தகவல் வெளிவரும் என்றார். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் நடைபெற கலந்து பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

நல்லபடியாக நடந்து முடிந்தால் சரிதான்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal