தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்குள் சென்று மாணவர்களுடன் உரையாட, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்தது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கிரஸ் – எம்.பி., ராகுல், 6, – 7 தேதிகளில் வருகிறார். வாரங்கல் மாவட்டத்தில், பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஹைதராபாதில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கு சென்று, மாணவ ,- மாணவியருடன் கலந்துரையாட ராகுல் திட்டமிட்டார். இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல்கலை நிர்வாகம் ராகுலுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

‘பல்கலை வளாகத்திற்குள் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்த கூடாது’ என, செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய மாணவர் சங்கம், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பல்கலை வளாகத்திற்குள், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்திய தேசிய மாணவர் சங்க தலைவர் வெங்கட் உட்பட, 18 பேர் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வர் சந்திர சேகரராவின் அடிமைகள் போல செயல்படுவதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷ்ரவன் குற்றஞ்சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal