‘அடுத்த கட்சிக்கு எத்தனை நாளைக்குத்தான் ஆலோசனை சொல்லிக்கிட்டு இருக்கறது; நாமே களத்துல இறங்கிட வேண்டியதுதான்’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன!

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து அக்கட்சியின் துணை தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். நிதிஷ்குமாருக்கும் அவருக்கும் மோதல் வலுக்கவே கட்சியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்.

அதன்பிறகு தனது ‘ஐ பேக்’ நிறுவனத்தின் மூலம் தேர்தல் வியூக பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரசில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர், ‘‘மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்’’ என சூசகமாக தெரிவித்துள்ளார்.

பீஹார் மாநிலத்தை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி துவங்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal